241 பேரை பலிகொண்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்தை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றடைந்தார்.

அகமதாபாத்தில் இருந்து லண்டனின் காட்விக் விமான நிலையத்திற்கு செல்ல இருந்த ஏர்இந்தியா 171 ரக விமானம் நேற்று நண்பகல் விபத்துக்குள்ளானது. சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நொடிகளிலேயே அருகில் உள்ள மேகானி என்ற குடியிருப்பில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. மேலும் அங்கிருந்த பி.ஜே.மருத்துவமனையின் உணவு விடுதி கட்டிடத்தின் மீது மோதி தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த 12 விமான ஊழியர்கள், 168 இந்தியர்கள், 53 இங்கிலாந்து நாட்டினர், 7 போர்ச்சுக்கல் நாட்டினர், கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 241 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நல்வாய்ப்பாக ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார்.

இந்நிலையில் விமான விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்றுகாலை சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு குஜராத் வந்தடைந்தார். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக மேகானி குடியிருப்பு பகுதிக்கு அவர் சென்று, விமான விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டார். மீட்பு பணிகள் நிலவரம் என்ன?, குடியிருப்புகளில் ஏற்பட்ட பாதிப்புகள் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார். பிரதமருடன் குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத், குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் பட்டேல், விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் விமான விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பி.ஜே.மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர்கள், குடியிருப்புவாசிகள் ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற அகமதாபாத் மருத்துவமனைக்கு பிரதமர் சென்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version