முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5205 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் மூன்று அடி உயர்ந்துள்ளது.

 

நீர்வரத்து அதிகரிப்பு

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவையைப் பூர்த்தி செய்யும் முல்லைப் பெரியாறு அணைக்கு, கடந்த சில மாதங்களாகப் போதிய மழை இல்லாததால் நீர்வரத்து மிகவும் குறைவாக இருந்தது. கடந்த மே 24 அன்று கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதையடுத்து, நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மே 24-ம் தேதி வினாடிக்கு 487 கன அடியாக இருந்த நீர்வரத்து, மே 25-ம் தேதி 584 கன அடியாகவும், நேற்று வினாடிக்கு 1648 கன அடியாகவும் அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் 10 செ.மீ., தேக்கடியில் 10.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5205.32 கன அடியாகப் பத்து மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

நீர்மட்டம் உயர்வு

அணையின் நீர்மட்டம் நேற்று 115.65 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 118.10 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மூன்று அடி வரை நீர்மட்டம் உயர்ந்திருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், நீர்மட்டம் மேலும் வேகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தற்போது அணையின் நீர் இருப்பு 2285.10 மில்லியன் கன அடியாக உள்ளது. அணையில் இருந்து தேனி மாவட்டக் குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version