நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை தொடர்பாக அவையில் அரசு மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்குப் பேச அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தனது கட்சிக்கு மட்டும் சபாநாயகர் ஓம் பிர்லா வாய்ப்பு மறுத்துவிட்டதாகச் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர்கள் மீதான காவல்துறை நடவடிக்கைகளுக்கு எதிரான தொடர் அமளிகளுக்குப் பின் மக்களவை மீண்டும் கூடியபோது, எதிர்க்கட்சிகளைச் சமமாக நடத்தவில்லை என்று கூறி அகிலேஷ் யாதவ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அரசு மற்றும் காங்கிரஸ் கட்சிகளைப் பேச அனுமதித்த சபாநாயகர், எங்களை ஏன் பேச அனுமதிக்கவில்லை? நீங்கள் அவர்களுடன் ஏதேனும் உடன்பாட்டிற்கு வந்துள்ளீர்களா? நாங்கள் ஒரு நிமிடம் மட்டுமே கேட்டோம், அது ஏன் மறுக்கப்பட்டது என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், “இது காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி அல்லது பாஜக தொடர்பான பிரச்சினை அல்ல. இது இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்பான பிரச்சினை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
சபையில் உரிய கவனம் செலுத்தப்படாததால்தான் பிரதமர் இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடத்த நேர்ந்தது என்றுகூறிய அவர், சபையில் பேச அனுமதித்திருந்தால் நாங்கள் அங்கு சென்றிருக்க மாட்டோம் என்றும் வாதிட்டார். கடந்த ஜூன் 20 அன்று நடைபெற்ற பேரணியின்போது மாணவர்கள் மீது காவல்துறை கடுமையான தாக்குதல் நடத்தியதாகவும், அவர்களின் கைகள் முறிக்கப்பட்டதாகவும், பெண் போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறைகள் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அமைச்சர்கள் பதவி விலகுவதை விட மாணவர்கள் நடத்தப்பட்ட விதமே உண்மையான கேள்வி என்றார். அமைச்சர்களை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம், அது பிரச்சினை அல்ல. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியால் இளைஞர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிட முடியாதா? அவரால் சபைக்கு வெளியே பேச முடியுமென்றால், நாடாளுமன்றத்திற்கு உள்ளே ஏன் பேச முடியாது என்று அகிலேஷ் கடுமையாக விமர்சித்தார்.
இதற்கிடையே, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நீட் வினாத்தாள் கசிவு குறித்து விரிவான விவாதத்திற்கு அரசு தயாராக இருப்பதாக உறுதியளித்த நிலையில், காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் நீட் விவகாரம் தீவிரமடைந்து வருவது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
