தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன். அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான ஆட்சியில் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடங்குகின்றனவா என்ற கேள்வியுடன், பல்வேறு முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில், தவெக அரசு சார்பில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம் அடிப்படையில் செயல்படுவதாக அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் புகாரின் எதிரொலி அடங்கும் முன்னரே, உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வில் பலத்த சந்தேகங்களை எழுப்பும் குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன.

2006ஆம் ஆண்டு பிறந்த ஒருவர் மற்றும் பெயரே இல்லாத ஒருவர் தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படும் இந்த முறைகேடு, இளைஞர்களிடையே கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. “நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம், செய்பவர்களையும் விடமாட்டோம்” என உறுதிமொழி அளித்து முதல்வர் பொறுப்பேற்ற விஜய், தேர்தல் பிரச்சாரத்தில் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால், ஆட்சிப் பொறுப்புக்கு வந்த சில மாதங்களிலேயே தவெக அரசின் செயல்பாடுகள் வேறு கதையைச் சொல்கின்றன. அரசு வழக்கறிஞர் நியமனங்கள், டெண்டர் ஒதுக்கீடுகள், உதவிப் பேராசிரியர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாமூல், லஞ்சம், பரிந்துரை அடிப்படையிலான நியமனங்கள் என ஊழல் குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக எழுந்துள்ளன. அரசு வேலையை நம்பி நீண்ட நாட்களாகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்களின் கனவுகள் இவ்வாறு சிதைக்கப்படுவது ஏற்புடையதல்ல. அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து அரசுப் பணிகளை விலை பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது முதல்வர் ஜோசப் விஜயின் தலையாய கடமை என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஊழல் முறைகேடுகள் தொடர்பாக உடனடி விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழக இளைஞர்களின் எதிர்பார்ப்பு. நம்பிக்கையின் அடிப்படையில் வாக்களித்த மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் முதல்வர் உரிய நடவடிக்கைகளை எடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version