துரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டத்தில், தமிழக ஆளுநரின் ஆய்வுப் பயணங்கள் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் சிபிஎம் எம்.பி. சு. வெங்கடேசன் கடுமையான  கருத்துகளை வெளியிட்டனர்.

மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன், மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய சு. வெங்கடேசன், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைந்து ஆய்வு செய்யும் சட்டப்பூர்வ அதிகாரம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவுக்கே (DISHA) உள்ளது என்றார்.

மேலும், “39 அமைச்சகங்களின் கீழ் செயல்படும் 96 துறைகளின் திட்டங்களை ஆய்வு செய்ய இந்தக் குழுவுக்கே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வேறு யாரேனும் அதிகாரிகளை அழைத்து பல்துறை ஆய்வுக் கூட்டம் நடத்தினால், அதிகாரிகள் அதில் பங்கேற்கக் கூடாது. மீறி பங்கேற்றால், குழு சார்பில் விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்படும்” என்று எச்சரித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், மக்கள் பிரதிநிதிகளும் மட்டுமே நிர்வாக ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். ஆளுநருக்கு எந்தத் திட்டத்தையும் ஆய்வு செய்யும் அதிகாரம் இல்லை. தமிழக அரசு இதை ஒருபோதும் அனுமதிக்காது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், “ஆளுநர் தேவையில்லாமல் அரசின் நிர்வாகத்தில் தலையிடவோ அல்லது ஆய்வு என்ற பெயரில் செயல்படவோ முயன்றால், அதற்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவிக்கும். அரசின் முன் அனுமதி இல்லாமல் எந்த அதிகாரியும் ஆளுநரின் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது” என்றும் அவர் வலியுறுத்தினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version