கடந்த 19-ம் தேதி அரக்கோணத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அதிமுக எம்.எல்.ஏ ரவியிடம் ஒரு புகார் மனுவை அளித்தார். அதில் திமுகவைச் சேர்ந்த ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் தெய்வசெயல் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, திமுக பிரமுகர்களுக்கு விருந்தாக்க நினைப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அத்தோடு இது தொடர்பான புகாரை எந்த ஒரு காவல்நிலையத்திலும் எடுத்துக் கொள்ளாமல் அலைகழிப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் பூதாகராமன நிலையில், அரக்கோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தெய்வசெயல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்கு எதிராக அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து விசாரணை நடத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணையை வலியுறுத்தி தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
3 நாட்களுக்குள் எஃப்ஐஆரின் நகலுடன் விரிவான நடவடிக்கை அறிக்கையையும் தாக்கல் செய்ய தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
