நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை (ஜூலை 24) நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒருநாள் போராட்டம் நடத்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் (CJP) அழைப்பு விடுத்துள்ளனர்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்திற்கு எதிராகத் டெல்லியில் சிஜேபி அமைப்பினரும், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் இணைந்து கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தினர். சோனம் வாங்சுக் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் 25 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்தது. பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஜூலை 20ல் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர். இந்தநிலையில், நாளை நாடு தழுவிய போராட்டத்திற்கு CJP அழைப்பு விடுத்துள்ளது. நீட் முறைகேட்டைக் கண்டிப்பதுடன், அமைதியாகப் போராடி காவல்துறையின் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படுகிறது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாணவர் சங்கங்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகள் இப்போராட்டத்திற்குத் தலைமையேற்று நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version