நீட் (NEET) நுழைவுத்தேர்வு மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. மருத்துவப் படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்டவற்றுக்கான முக்கிய நுழைவுத்தேர்வான நீட், மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்வாக விளங்குகிறது. உலக அளவில் அதிக மாணவர்கள் பங்கேற்கும் தேர்வுகளில் ஒன்றாகவும் இது உருவெடுத்துள்ளது.

கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் சுமார் 22 லட்சம் மாணவ-மாணவிகள் தங்கள் கனவை நனவாக்கும் நம்பிக்கையுடன் பங்கேற்றனர். ஆனால், தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாக வட மாநிலங்களில் எழுந்த புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. விசாரணையில் கசிவு உறுதியானதைத் தொடர்ந்து, மத்திய அரசு மே 12-ம் தேதி தேர்வை ரத்து செய்தது. இந்த முடிவு இரவு பகல் பாராமல் உழைத்த மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. ஒரு சிலரின் தவறுக்காக 22 லட்சம் பேரும் பாதிக்கப்பட்ட சூழல் உருவானது.

இருப்பினும், மாணவர்கள் தங்களை மீண்டும் தயார்படுத்தினர். தேசிய தேர்வு முகமை (NTA) ஜூன் 21-ம் தேதி மறுதேர்வு நடைபெறும் என அறிவித்தது. கடந்த முறை ஏற்பட்ட குறைபாடுகளைத் தவிர்க்க, இம்முறை மத்திய பாதுகாப்புப் படையின் உதவியுடன் வினாத்தாள்கள் நாடு முழுவதும் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. அரசு வங்கிகளின் பாதுகாப்பு அறைகளில் சேமிக்கப்பட்டன. 551 இந்திய நகரங்கள் மற்றும் 14 வெளிநாட்டு நகரங்களில் உள்ள 5,440 தேர்வு மையங்களில் 22.7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது.

இந்நிலையில், தேர்வு நடைபெறுவதற்கு முன்பே வினாத்தாள் டெலிகிராமில் கசிந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பலர் தேர்வு ரத்தாகிவிடும் என அஞ்சினர். இதற்கு விரைவில் விளக்கம் அளித்த என்.டி.ஏ., “மறுதேர்வு விரிவான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் வெற்றிகரமாக நடைபெற்றது. சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ முற்றிலும் போலியானது. அந்த தகவலும் உண்மையல்ல” என எக்ஸ் தளத்தில் தெரிவித்தது.

மாணவர்களுக்கு தவறான தகவல்களைப் பரப்புவது தீவிர குற்றம் என எச்சரித்த என்.டி.ஏ., அதிகாரப்பூர்வ வலைதளங்கள் மற்றும் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடக பக்கங்களை மட்டுமே நம்புமாறு பெற்றோர், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.
இந்த மறுதேர்வில் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அமைதியான, வெளிப்படையான முறையில் தேர்வு எழுதியுள்ளதாக என்.டி.ஏ. தெரிவித்துள்ளது.

இருப்பினும், இத்தகைய போலி செய்திகள் மாணவர்களின் மன உளைச்சலை அதிகரிப்பதால், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. மொத்தத்தில், நீட் தேர்வின் நம்பகத்தன்மையை பாதுகாக்க மத்திய அரசு மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க, தேர்வு நடைமுறைகளில் தொடர்ச்சியான மேம்பாடுகள் தேவை.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version