புதுச்சேரியில் பெய்த கனமழையால் தனியார் நிறுவனத்தின் மதில் சுவர் சாலையோர தள்ளுவண்டி டிபன் கடை மீது இடிந்து விழுந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததுடன், இரண்டு பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் இரவு 8.30 மணியளவில் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் கனரக ஊர்திகள் முனையம் அருகே செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தின் சுமார் 25 அடி நீளமும், 15 அடி உயரமும் கொண்ட மதில் சுவர் திடீரென சரிந்து சாலையோரத்தில் இயங்கி வந்த தள்ளுவண்டி டிபன் கடை மீது விழுந்தது.

அப்போது அந்த கடையை நடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த கங்காமணி (60), சாமுண்டீஸ்வரி (50), செங்கேணி (40) ஆகிய மூவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், போலீசார் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர், மாவட்ட ஆட்சியர்  குலோத்துங்கன் மற்றும் டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் ஆகியோரின் மேற்பார்வையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

மீட்புப் பணியில், சாமுண்டீஸ்வரி மற்றும் செங்கேணி ஆகியோர் பலத்த காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த கங்காமணி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து, இடிபாடுகளுக்குள் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா என்பதை உறுதி செய்யும் வகையில் மீட்புக் குழுவினர் 4 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இடிபாடுகளுக்குள் யாரும் இல்லை. சம்பவ இடத்திற்கு நேரில் வந்த முதல்வர் ரங்கசாமி, மீட்புப் பணிகளை ஆய்வு செய்து, காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதேபோல் அமைச்சர் சிவக்கொழுந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறுமுகம், அழகானந்தம் உள்ளிட்டோரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version