எரிபொருள், உரங்கள், அன்னிய செலாவணி ஆகியவற்றில் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்.

உலக அரங்கில் ஏற்பட்டுள்ள புதிய புவிசார் அரசியல் பதற்றம் இந்தியப் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. மேற்காசியாவில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி தொடுத்த தாக்குதலுக்குப் பின்னர் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் நேரடி எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடந்த 11 நாட்களில் மட்டும் லிட்டருக்கு தலா ₹7 உயர்த்தப்பட்டுள்ளன. இது போக்குவரத்து, உற்பத்தி மற்றும் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி (SIDBI) தனது 37வது ஆண்டு விழாவில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கவலைக்குரிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். “கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பது தற்போதைய சவால்களில் ஒரு பகுதி மட்டுமே. உரங்களின் விலை கற்பனைக்கு எட்டாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது விவசாயிகளின் உற்பத்திச் செலவை பெருமளவு அதிகரிக்கும்” என்று அவர் எச்சரித்தார். பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு விடுத்துள்ள மூன்று முக்கிய கோரிக்கைகளை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் பயன்பாட்டில் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது, அனாவசிய வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்ப்பது மற்றும் ஒரு ஆண்டு காலம் தங்கம் வாங்குவதை நிறுத்தி வைப்பது ஆகியவை அன்னியச் செலாவணி கையிருப்பைப் பாதுகாக்க உதவும் என்றார். “இந்த மூன்று நடவடிக்கைகளையும் ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார். ஈரான்-அமெரிக்க மோதல் வெறும் அரசியல் பிரச்னை அல்ல என்பதை அமைச்சர் விளக்கினார்.

இதனால் எரிபொருள் விலை உயர்வு, சரக்குப் போக்குவரத்தில் தாமதம், கப்பல் கட்டணங்கள் அதிகரிப்பு, உற்பத்திப் பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பின்விளைவுகள் ஏற்படும் என்று சுட்டிக்காட்டினார். இருப்பினும், நாட்டின் உள்நாட்டுப் பொருளாதாரம் இன்னும் வலுவுடன் உள்ளது என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரிப்பு, உள்நாட்டுத் தேவை உயர்வு மற்றும் தனியார் முதலீடுகள் அதிகரிப்பு போன்றவை நல்ல அறிகுறிகள் என்றார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு (MSME) பொதுத் துறை நிறுவனங்கள் செலுத்த வேண்டிய ₹8.1 லட்சம் கோடி நிலுவைத் தொகையை 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்ற உத்தரவையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

தங்கம் விலை வேகமாக உயர்வதும் நாட்டின் அன்னியச் செலாவணிக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். அரசியல் நோக்கங்களுக்காக நாட்டின் சாதனைகளை மறைத்து அவநம்பிக்கையைப் பரப்ப முயற்சிப்பவர்களை ஊக்குவிக்கக் கூடாது என்று தெரிவித்த அமைச்சர், தற்போதைய நெருக்கடியை ஒற்றுமையுடன் எதிர்கொண்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்தச் சூழலில், அரசு பல்வேறு மாற்று எரிபொருள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டியது அவசியம் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version