இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான பக்ரீத் நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தென் தமிழகத்தின் புகழ்பெற்ற நெல்லை மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் குர்பானி ஆடுகளின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலையிலேயே தொடங்கிய இந்தச் சந்தையில், ஒட்டுமொத்தமாக சுமார் 4 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனையாகி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தையில் பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. செம்மறி ஆடுகளில் பொட்டுக்குட்டி, செங்குட்டி, மகிழம்பாடி போன்ற வகைகளும்; வெள்ளாடுகளில் பல்லையாடு, கொடியாடு, கருப்பு கிடா போன்ற வகைகளும் அதிக அளவில் காணப்பட்டன. குறைந்தபட்சமாக ஒரு கிடா ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை விற்கப்பட்டது. அதிகபட்சமாக தரமான ஒரு செம்மறிக் கிடா ரூ.55,000 முதல் ரூ.60,000 வரை அதிக விலைக்கு விற்பனையானது.

குர்பானிக்காக ஆடுகளை வாங்குவதற்காக நெல்லை மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களான தென்காசி மற்றும் தூத்துக்குடியில் இருந்தும் மக்கள் அதிக அளவில் சந்தையில் திரண்டனர். அதேபோல, ஆடுகளை விற்பனை செய்வதற்காக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர் மட்டுமில்லாமல், மதுரை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் வியாபாரிகளும் இங்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version