வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்தும் வகையில், ‘யூசர்நேம்’ (Username) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

இதன் மூலம் இனி மொபைல் எண் பகிராமல், யூசர்நேம் மூலமே மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.

இதுவரை வாட்ஸ்அப்பில் உரையாட மொபைல் எண் அவசியமாக இருந்த நிலையில், இனி இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களைப் போல தனிப்பட்ட யூசர்நேமை உருவாக்கிக்கொள்ளலாம். புதிய நபர்களுடன் உரையாடும்போது உங்கள் மொபைல் எண் மறைக்கப்பட்டு யூசர்நேம் மட்டுமே காண்பிக்கப்படும்.

நாம் உருவாக்கும் யூசர்நேம் 3 முதல் 35 எழுத்துகளுக்குள் இருக்க வேண்டும். மற்ற சமூக ஊடகங்களைப் போல வாட்ஸ்அப்பில் யாரையும் யூசர் நேம் கொண்டு தேடிக் கண்டுபிடிக்க முடியாது. துல்லியமான யூசர் நேம் தெரிந்தால் மட்டுமே மற்றவர்கள் உங்களைத் தொடர்பு கொள்ள முடியும். புதியவர்கள் உங்களைத் தொடர்புகொள்வதைக் கட்டுப்படுத்த ‘யூசர் நேம் கீ’ என்ற கூடுதல் பாதுகாப்பு வசதியும் உண்டு. இந்த ‘கீ’ இருந்தால் மட்டுமே அவர்கள் உங்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும். இதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.

பதிவு செய்வது எப்படி?

உங்கள் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்துவிட்டு செட்டிங் பகுதிக்கு சென்று, Account என்பதை தேர்வு செய்து, யூசர் நேம் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, நமக்கு பிடித்த பெயரை பதிவு செய்துகொள்ளலாம். உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமான பயனர்கள் உள்ளதால், ஒரே மாதிரியான பெயர்கள் பலருக்கு இருக்க வாய்ப்புள்ளது. எனவே, தங்களுக்குப் பிடித்த பெயர்களைப் பயனர்கள் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வாட்ஸ்அப் அனுமதி அளித்துள்ளது.

நிறுவனங்கள், பிரபலங்கள் மற்றும் அரசு அமைப்புகளின் பெயர்களை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, சில முக்கிய பெயர்களை வாட்ஸ்அப் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் இருக்கும் தங்களின் அதே யூசர்நேம்களை வாட்ஸ்அப்பிலும் பயன்படுத்திக் கொள்ள வணிக நிறுவனங்களுக்கும், படைப்பாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதிக்கான முன்பதிவு இந்த வாரம் தொடங்குகிறது. உலகம் முழுவதும் உள்ள பயனர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் படிப்படியாக இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்படும் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version