உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் காரணமாக, நாட்டில் உள்ளூர் அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க மத்திய அரசு தற்காலிகக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, சில்லறை எரிபொருள் நிலையங்களில் ஒரு வாகனத்திற்கு அல்லது ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 200 லிட்டர் டீசல் மட்டுமே வழங்கப்படும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டீசல் மற்றும் பெட்ரோலை நேரடியாக வாகனங்களின் எரிபொருள் தொட்டிகளிலோ அல்லது பிஇஎஸ்ஓ (PESO) அங்கீகாரம் பெற்ற கொள்கலன்களிலோ மட்டுமே நிரப்ப வேண்டும். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற மொத்தமாக எரிபொருள் வாங்கும் நுகர்வோர், இனி சில்லறை பெட்ரோல் பங்குகளில் இருந்து பெட்ரோல், டீசல் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுக்கு என அங்கீகரிக்கப்பட்ட பிரத்யேக நுகர்வோர் பங்குகள் மூலமாகவே எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதாவது, சில்லறை விற்பனை விலைக்கும், மொத்த விற்பனை விலைக்கும் இடையே உள்ள விலை வித்தியாசம் காரணமாக, மொத்த நுகர்வோர்கள் சில்லறை பங்குகளில் அதிகளவில் எரிபொருள் வாங்கியதால் பல பகுதிகளில் அசாதாரணத் தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் சாதாரண பொதுமக்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

‘Temporary Regulation of Supply Order, 2026’ என்ற இந்தத் தற்காலிக உத்தரவு 90 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும். தேவைப்படின் இது மேலும் நீட்டிக்கப்படலாம். மேலும், கள்ளச்சந்தை விற்பனை மற்றும் பதுக்கல் போன்ற முறைகேடுகளைத் தடுக்க கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version