டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் “காவல்துறை வன்முறையை” எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரிய கோரிக்கையை, “காணொளிகளைப் பார்க்க எங்களுக்கு நேரமில்லை” என்று கூறி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் நிராகரித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான, நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோரையும் கொண்ட அமர்வின் முன்பு இந்த விவகாரம் தொடர்பான மனு அளிக்கப்பட்டது. அதாவது, வழக்கை அவசரமாக பட்டியலிடக் கோரிய மனுதாரரின் வழக்கறிஞர், திங்கள்கிழமை நடந்த போராட்டத்தின்போது மாணவர்கள் மீது காவல்துறை வன்முறை நடத்தியதாகவும், அந்த மனுவில் மூன்று முக்கியக் கோரிக்கைகள் அடங்கியுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், “காவல்துறை வன்முறை தொடர்பான காணொளிகளும் என்னிடம் உள்ளன… நாளை விசாரணைக்குப் பட்டியலிட முடிந்தால் நன்றாக இருக்கும், அங்கு மாணவர்கள் இருக்கிறார்கள்” என்றும் வாதிட்டார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி, “எங்களுக்கு அந்த வீடியோக்களை பார்க்க விருப்பமில்லை, பார்ப்பதற்கும் நேரமில்லை… நாங்கள் காணொளிகளைப் பார்க்க விரும்பவில்லை” என்று திட்டவட்டமாகக் கூறி அந்தக் கோரிக்கையை நிராகரித்தார். வழக்கறிஞர் மீண்டும் காணொளி ஆதாரத்தைச் சுட்டிக்காட்டி மாணவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறியபோது, “எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். நாங்கள் எந்தக் காணொளியையும் பார்க்க விரும்பவில்லை” என்று தலைமை நீதிபதி பதிலளித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் தொடக்க நாளான திங்கட்கிழமை அன்று, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (CJP) ‘சன்சத் சலோ’ பேரணியின் போது மேற்கொள்ளப்பட்ட காவல்துறை நடவடிக்கை தொடர்பானது இந்த மனுவாகும். போட்டித் தேர்வுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி சென்றனர்.

அப்போது போராட்டக்காரர்கள் காவல்துறை தடுப்புகளை மீற முயன்றதால் போராட்டம் வன்முறையாக மாறியது. கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் தடியடிகளையும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் பயன்படுத்தியதில், இரு தரப்பிலும் காயங்கள் ஏற்பட்டன.

இதற்கிடையில், ஜந்தர் மந்தரில் சிஜேபி நடத்தி வரும் உள்ளிருப்புப் போராட்டம் புதன்கிழமையன்று இரண்டாவது மாதத்தில் நுழைந்துள்ளது. ஜூன் 20 அன்று தொடங்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், தேர்வு முறைகேடுகள் குறித்த பொறுப்புக்கூறல், கல்வி முறையில் சீர்திருத்தங்கள் மற்றும் கல்வி அமைச்சரின் ராஜினாமா ஆகியவை வலியுறுத்தப்பட்டு வருகின்றன. இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் அங்கிருந்தபடியே தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version