இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அதிரடி மாற்றத்தைத் தொடர்ந்து, சூர்யகுமார் யாதவின் கிரிக்கெட் பயணம் குறித்து ஹிட்மேன் ரோஹித் சர்மா நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார்.
மும்பையில் நடைபெற்று வரும் டி20 லீக் போட்டியின் இடையே பேசிய ரோஹித் சர்மா, சூர்யகுமாரின் விடாமுயற்சியைப் பாராட்டிப் பேசியுள்ளார். சூர்யகுமார் யாதவுக்கு அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் எதுவுமே எளிதாகக் கிடைத்துவிடவில்லை. அவர் தனது 30 அல்லது 31 வயதில்தான் இந்திய அணிக்காக அறிமுகமானார். இவ்வளவு தாமதமாக வாய்ப்பு கிடைத்த போதிலும், அவர் எப்போதும் தனது முயற்சியைக் கைவிடவில்லை. எப்போதும் போராடத் தயாராக இருந்தார்” என்று ரோஹித் குறிப்பிட்டார்.
தனக்குக் கிடைத்த சர்வதேச வாய்ப்பை சூர்யகுமார் யாதவ் இரு கரங்களால் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். அவரது தலைமையில் இந்திய அணி அண்மையில் டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்ததையும் ரோஹித் சர்மா இந்த நிகழ்வின் போது நினைவு கூர்ந்தார்.
மும்பை மண்ணில் இருந்து வரும் வீரர்களுக்குப் பொறுப்பும், கேப்டன் பதவியும் சும்மா கிடைத்துவிடாது. அதை அவர்கள் தங்களது திறமையால் கடினமாக உழைத்துதான் சம்பாதிக்க வேண்டும். சூர்யகுமார் யாதவ் மற்றும் புதிய கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரிடமும் அந்தத் தகுதி இருக்கிறது என்று ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார்
2024-ல் இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு, சூர்யகுமார் யாதவ் கேப்டனாக 42 இன்னிங்ஸ்களில் 932 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்தக் காலகட்டத்தில், அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை, ஆறு அரை சதங்களை மட்டுமே அடித்துள்ளார். தனது முழு டி20 கிரிக்கெட் வாழ்க்கையில், சூர்யகுமார் யாதவ் 113 போட்டிகளில் 3272 ரன்கள் எடுத்துள்ளார்.
ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து ரோஹித் ஷர்மாவும் கருத்து தெரிவித்தார். அவர், “ஐபிஎல் தொடரில் அவர் தனது அணியை வழிநடத்திய விதத்தைப் பார்க்கும்போது, அவர் இந்திய அணியை சிறப்பாகக் கையாள்வார் என்று என்னால் கூற முடியும்,” என்றார்.
