தமிழர்களின் கடும் எதிர்ப்பை மீறி அணு கனிம சுரங்கம் அமைக்கும் திட்டதை மத்திய அரசு கைவிடவில்லை எனில் கடுமையான போராட்டத்தை மக்களுடன் இணைந்து தமிழக வாழ்வுரிமைக்கட்சி முன்னெடுக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;-

கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரை மணலில் (placer deposits) மோனாசைட்தோரியம் (Th) ~5-10% (சில இடங்களில் அதிகம்), ரேர் எர்த் எலிமென்ட்ஸ் (REE),சிறிய அளவு யுரேனியம். இல்மெனைட் (Ilmenite) — டைட்டானியம் (Titanium) மூலப்பொருளாகும். மேலும் ரூட்டைல் (Rutile), ஜிர்கான் (Zircon), கார்னெட் (Garnet), சில்லிமனைட் (Sillimanite) போன்றவைகள் அணு கனிம சுரங்க திட்டத்துக்கு முக்கியமானது.

இந்தியா உலகின் மிகப்பெரிய தோரியம் இருப்புகளில் ஒன்றை கொண்டுள்ளது. தோரியத்தை எடுத்து அணு உலைகளில் (Thorium-based reactors) பயன்படுத்தலாம். மணவாளக்குறிச்சியில் IREL எனப்படும்Indian Rare Earths Limited) நிறுவனம் 1950ம் ஆண்டிலிருந்து தொடங்கப்பட்டாலும் 1963ம் ஆண்டு முதல் முழு அரசு நிறுவனமாக செயல்படுகிறது. இதனால் மணவாளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கதிர்வீச்சு ஏற்பட்டு புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, தைராய்டு மற்றும் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பு உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

மத்திய சுரங்க அமைச்சகம் 1,144.0618 ஹெக்டேர் பரப்பில் கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனையம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு போன்ற கிராமங்களில் அணு கனிம சுரங்கம் அமைத்து சுமார் 59.88 மில்லியன் டன் மணல் அகழ்வு எடுக்க முடிவெடுத்துள்ளது என்ற தகவல் தமிழக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு தமிழக வாழ்வுரிமைக்கட்சி மற்றும் பொதுமக்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக இக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தல்வரை எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாத பாஜக தலைமையிலான மத்திய அரசு மக்களின் கருத்தைக் கேட்காமலேயே இத்திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.

மேலும் தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை மீறி இத்திட்டத்தை செயல்படுத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. தமிழர்களின் நலன்மீது அக்கரை கொள்ளாத மத்திய அரசு இத்திட்டத்தைக் கைவிடவில்லை என்றால், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்களைத் திரட்டித் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version