நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், 1997-ஆம் ஆண்டு ஒடிசாவில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக அவர் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பழைய தகவல் சமூக வலைதளங்களில் மீண்டும் பரவி வருகிறது.
1997-ஆம் ஆண்டு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தேசியச் செயலாளராக இருந்த தர்மேந்திர பிரதான், ஒடிசாவில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக சுமார் 1,500 மாணவர்களை வழிநடத்தி தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்தியதாகவும், அந்தப் போராட்டத்தின் போது காவல்துறை தடியடி நடத்தியதில் அவர் பலத்த காயமடைந்து எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், இருந்தபோதிலும் தனது போராட்டத்தை தொடர்ந்தார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
உத்கல் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற காலத்திலேயே தர்மேந்திர பிரதான் மாணவர் அரசியலில் தீவிரமாக செயல்பட்டதாகவும், 1994 முதல் 1997 வரை இரண்டு முறை ABVP-யின் தேசியச் செயலாளராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தப் பழைய தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்படும் நிலையில், மாணவர் தலைவராக இருந்தபோது வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய அவரது செயல்பாட்டை ஒரு தரப்பு பாராட்டி வருகிறது.
ஆனால் மற்றொரு தரப்பு, தற்போது மத்திய கல்வி அமைச்சராக இருக்கும் அவர், தொடர்ச்சியாக நடைபெறும் வினாத்தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்க ஏன் முடியவில்லை என்று கேள்வி எழுப்பி வருகிறது.
2021 முதல் மத்திய கல்வி அமைச்சராக உள்ள தர்மேந்திர பிரதான், நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் காரணமாக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்களில், 2026 நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.
