லண்டனில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

லண்டனுக்கு வடக்கே உள்ள பெட்போர்ட் நகருக்கு அருகிலுள்ள எல்ஸ்டோவில் (Elstow) பெரும் ரயில் விபத்து ஏற்பட்டது. இரண்டு ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் ரயில்வே (East Midlands Railway) பயணிகள் ரயில்கள் மோதியதில் ஒரு ரயில் டிரைவர் உயிரிழந்தார். மேலும் 89 பயணிகள் மற்றும் ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். இது பிரிட்டனில் சமீபகாலத்தில் நிகழ்ந்த முக்கிய ரயில் விபத்துகளில் ஒன்றாக பதிவாகியுள்ளது.

விபத்து நடந்த இடத்தில் இரு ரயில்களும் பலத்த சேதத்துக்கு உள்ளாகின. ஒரு ரயில் நின்ற நிலையில் இருந்தபோது மற்றொன்று பின்புறமாக வேகமாக மோதியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணிகள் திடீர் மோதலில் முன்னோக்கி வீசப்பட்டதால் பலருக்கு எலும்பு முறிவு, தலையில் பலத்த அடி மற்றும் பிற காயங்கள் ஏற்பட்டன. இந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈஸ்ட் ஆஃப் இங்கிலாந்து ஆம்புலன்ஸ் சர்வீஸ் தகவலின்படி, 11 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் பலத்த காயங்களுடனும், 56 பேர் சிறு காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணிகளில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டன. சில பயணிகள் ரயிலுக்குள் சிக்கியிருக்கலாம் என சந்தேகித்து தேடுதல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. ஐந்து ஏர் ஆம்புலன்ஸ்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

பிரிட்டன் போக்குவரத்து அமைச்சர் ஹைடி அலெக்சாண்டர் இந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். “நிலவரத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய உதவிகள் வழங்கப்படும்” என்றார். பிரதமர் கேர் ஸ்டார்மர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து ஆதரவும் அளிக்கப்படும் என உறுதியளித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி மற்றும் உளவியல் ஆதரவு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ரயில்வே அதிகாரிகள், போக்குவரத்து பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் ரெயில் ஆக்சிடென்ட் இன்வெஸ்டிகேஷன் பிராஞ்ச் (RAIB) விசாரணை தொடங்கியுள்ளன. சிக்னல் பிழை அல்லது மனிதத் தவறு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட சந்தேகம் எழுந்துள்ளது. விபத்து காரணமாக லூட்டன்-பெட்போர்ட் இடையிலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பயணிகள் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், உண்மையான காரணம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version