சென்னை தலைமைச் செயலக வளாகத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் காரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவறுதலாக மீண்டும் ஏற முயன்ற சுவாரஸ்யமான சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சட்டசபைக்கு வெளியே தலைமைச் செயலக வளாகப் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் காரும், அதற்குச் சற்று முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் காரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

சட்டமன்றக் கூட்டம் நிறைவடைந்ததும், இருவரும் வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களைத் தனித்தனியாகச் சந்தத்துப் பேட்டியளித்தனர். பின்னர், சட்டசபையில் உள்ள தங்களது அலுவலகங்களுக்குச் சென்று எம்.எல்.ஏ-க்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ஆலோசனைகள் முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமி வீட்டிற்குப் புறப்படுவதற்காகக் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு நடந்து வந்தார். அப்போது, அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது உதயநிதி ஸ்டாலினின் கார் என்பதை அறியாமல், அவசரத்தில் கதவைத் திறந்து ஏற முயன்றார்.

உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட அவரது பாதுகாவலர்கள், “அய்யா, நமது கார் முன்னால் நிற்கிறது, இது எதிர்க்கட்சித் தலைவரின் கார்” எனச் சுட்டிக்காட்டினர். இதைக் கேட்டதும் உடனடியாகச் சிரித்தபடி நிலைமையை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி, பிறகு முன்னால் நின்றிருந்த தனது சொந்தக் காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார்.

கடந்த திமுக ஆட்சியின் போதும் இதேபோன்று உதயநிதி ஸ்டாலினின் காரில் எடப்பாடி பழனிசாமி தவறுதலாக ஏற முயன்ற சம்பவம் நடைபெற்றிருந்த நிலையில், மீண்டும் அதே போன்ற ஒரு நிகழ்வு தலைமைச் செயலகத்தில் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version