தவெக’வில் பதவி கிடைக்காமல் போன விரக்தியில், அக்கட்சியின் தலைவர் விஜய்யின் காரை மறித்து கண்ணீர் மல்க போராடிய பெண் நிர்வாகியால் பனையூரில் பரபரப்பு நிலவியது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் தற்போது மாவட்டச் செயலாளர்கள் நியமனம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் நெருங்கி வருவதையடுத்து நிர்வாகிகளை நியமிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ள சூழலில் தான், நீண்ட நாட்களாகக் கோரப்பட்டு வந்த மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கான அறிவிப்புகள் இன்று வெளியாகத் துவங்கியுள்ளன.
அதனடிப்படையில், தூத்துக்குடி மற்றும் திருச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய 8 மாவட்டச் செயலாளர் பணியிடங்களுக்குப் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதில், தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் பதவி சாமுவேல் என்பவருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதிருப்தி அடைந்த தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளரான அஜிதா ஆக்னல் தனது ஆதரவாளர்களுடன் பனையூர் அலுவலகத்துக்கு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சித் தலைவர் விஜயைச் சந்தித்துத் தனது தரப்பு நியாயத்தைக் கூற வேண்டும் என்ற கோரிக்கையோடு காத்திருந்த அவரை பாதுகாப்புப் பணியில் இருந்த ஊழியர்கள் உள்ளே செல்ல அனுமதிக்காததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தலைமை அலுவலக வளாகத்திலேயே கண்ணீர் மல்கக் காத்திருந்த அஜிதா ஆக்னல், “கட்சிக்காக இரவு பகலாக ஓடி ஓடி உழைத்த எனக்கு உரிய அங்கீகாரம் தரப்படவில்லை; தலைவரைச் சந்திக்கக் கூட அனுமதி மறுக்கப்படுவது மிகவும் வேதனையளிக்கிறது” எனக் கூறி கதறி அழுதார்.
ஒருகட்டத்தில், பனையூரில் தவெக தலைமை அலுவலகத்திற்கு வந்த விஜய்யின் காரை மறித்து அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டு முற்றுகையிட்டனர். இருப்பினும் விஜய் அவரை சந்திக்கவில்லை.
உடனடியாக அங்கிருந்த தனியார் பாதுகாவலர்களும் மற்ற நிர்வாகிகளும் அவரை அப்புறப்படுத்தி வழியைச் சீர்செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள சி.டி.ஆர்.நிர்மல்குமார், “ஒவ்வொரு கட்சியிலும் இவ்வாறு மனக்கசப்புகள் வருவது இயல்பு தான். தவெகவைப் பொறுத்தவரை கட்சிக்காக உழைத்தவர்களை தலைவர் விஜய் நிச்சயம் கைவிடமாட்டார்” என கூறியுள்ளார்.
கட்சி தலைமை அலுவலகத்திலேயே ஒரு பெண் நிர்வாகி இவ்வாறு கண்ணீரோடு முற்றுகை போராட்டம் நடத்தியிருப்பது ஒருபுறம் அக்கட்சியினரிடையே விவாதத்தை கிளப்ப, திமுக உள்ளிட்ட கட்சிகளோ தங்களுக்கான பாயிண்டாக இவ்விவகாரத்தை பயன்படுத்தி வருகின்றன. உள்கட்சி ரீதியாக விஜய் இன்னும் இதுபோன்ற எத்தனையோ பஞ்சாயத்துகளை இந்த தேர்தலுக்குள் பார்க்க வேண்டியிருக்கிறது என சிரித்துக்கொண்டே சொல்லி செல்கின்றனர் சில அரசியல் நோக்கர்கள்.
