நில எடுப்பு பணிகள் நிறுத்தப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ள அதிகாரிகள், இதுகுறித்து விரிவான ஆய்வறிக்கை தயார் செய்து முதலமைச்சர் விஜய்யிடம் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டம் தமிழ்நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்பட்டது. முந்தைய திமுக ஆட்சியில் 5,600 ஏக்கர் பரப்பளவில் இந்த மிகப்பெரிய திட்டம் தீட்டப்பட்டது. தற்போது சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையம் தினசரி 60,000க்கும் அதிகமான பயணிகளையும், 400க்கும் மேற்பட்ட விமானங்களையும் கையாள்கிறது. பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வதால், ஏற்கெனவே நெரிசல் மிகுந்துள்ள மீனம்பாக்கத்திற்கு மாற்றாக பரந்தூர் திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த விமான நிலையத்தைச் சுற்றி நவீன சரக்குக் கிடங்குகள், ஏற்றுமதி-இறக்குமதி மையங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் மற்றும் உயர்தர ஹோட்டல்கள் அடங்கிய ‘ஏரோட்ரோபோலிஸ்’ நகரம் உருவாக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதன் மூலம் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கெனவே 3,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கிய நிலையில், மீதமுள்ள 1,700 ஏக்கர் விவசாய நிலங்களைப் பெறும் பணி நடைபெற்று வந்தது.

எனினும், உள்ளூர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய விஜய், தனது முதல் முக்கிய செயல்பாடாக பரந்தூருக்கு சென்று மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார். “பரந்தூரில் விமான நிலையம் வராது” என்ற உறுதியான உத்தரவாதத்தையும் விவசாயிகளுக்கு அளித்திருந்தார்.

தற்போது தவெக தலைமையில் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்தத் திட்டம் கைவிடப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், கையகப்படுத்தப்பட்ட 1,700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க முடிவு செய்யப்பட்டதாக வெளியான தகவல் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில், விமான நிலைய ஆணையம் (AAI) அதிகாரிகள் பரந்தூர் திட்டத்தின் அவசியம் குறித்த விரிவான ஆய்வறிக்கையைத் தயாரித்துள்ளனர்.

பொதுமக்களின் எதிர்ப்பால் நில எடுப்பு பணிகள் நிறுத்தப்பட்டதில் AAI அதிர்ச்சி அடைந்துள்ளது. மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை விரைவில் முதலமைச்சர் விஜய்யிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஆணைய அதிகாரிகள் கூறுகையில், “சென்னையில் இரண்டாவது விமான நிலையம் காலத்தின் கட்டாயம். பரந்தூர் இடம் பல்வேறு சர்வதேச விமானங்களை இயக்க ஏற்றது. அடுத்த 30 முதல் 50 ஆண்டுகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நில அமைப்பு, சுற்றுச்சூழல் தாக்கம், போக்குவரத்து இணைப்பு உள்ளிட்ட அனைத்து ஆய்வுகளும் முடிக்கப்பட்டுவிட்டன. ஏரோட்ரோபோலிஸ் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்” என்று தெரிவித்துள்ளனர். இந்த முக்கிய அறிக்கையைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்யின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதை தமிழ்நாடு முழுவதும் உற்று நோக்கி வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version