அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஏற்படும் அசம்பாவிதங்களில் பலியானவர்களுக்கான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டுமா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு மிக்ஜாம் தீவிர புயலின் காரணமாக சென்னை மாநகரம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அப்போது, ஆர்.கே.நகர் பகுதியில் வெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. ஆர்.கே. நகர் மண்டல செயலாளர் நித்தியானந்தம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று நிவாரண உதவிகளை வழங்கினார்.

2023 டிசம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நிவாரண உதவி பெறச் சென்ற 14 வயது சிறுமி யுவஸ்ரீ கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். தனது மகள் மரணத்துக்கு இழப்பீடாக 50 லட்ச ரூபாய் வழங்கக் கோரி யுவஸ்ரீயின் தந்தை பி. வடிவேலு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், அரசின் அஜாக்கிரதை மற்றும் நிர்வாக குறைபாடு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதால், தனது மகள் மரணத்துக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும்,  2025 ஜூலையில் அளித்த விண்ணப்பத்தின் மீது எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முகமது சபீக், அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஏற்படும் அசம்பாவிதங்களில் பலியானவர்களுக்கான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டுமா என்பது குறித்து 2 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். இதேபோல இந்த வழக்கு குறித்து அதிமுக-வும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version