கன்னியாகுமரியில் தண்ணீர் நிரப்பிய பக்கெட்டில் தவறி விழுந்த ஒரு வயது ஆண் குழந்தை, மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்த சூழால் பகுதியைச் சேர்ந்தவர் சுனில். கூலித் தொழிலாளியான இவருக்கு ஆஷா என்ற மனைவியும், தர்வின் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் இருந்தனர். நேற்று வழக்கம் போல சுனில் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், ஆஷா வீட்டில் சமையல் பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது, இவர்களது குழந்தை தர்வின் வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

அப்பகுதியில் துணி துவைப்பதற்காகப் பெரிய வாளி ஒன்றில் நிறையத் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தர்வின், எதிர்பாராத விதமாகத் தண்ணீர் வாளியின் உள்ளே தலைகீழாகத் தவறி விழுந்துள்ளான்.

சமையல் வேலைகளை முடித்துவிட்டு வெளியே வந்த தாய் ஆஷா, தன் குழந்தை தண்ணீருக்குள் மூழ்கியிருப்பதை கண்டு உறைந்து போய் அலறியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், குழந்தையை மீட்டு உடனடியாக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கைவிரித்தனர்.

இந்தத் துயரச் சம்பவம் குறித்து மார்த்தாண்டம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version