நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், சுமூகமான முறையில் கூட்டத்தொடரை நடத்துவது குறித்து விவாதிக்க, மத்திய அரசு நாளை (ஜூலை 19) அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், புதிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவும் அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்தும், விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய முக்கிய மசோதாக்கள் குறித்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாட, மத்திய அரசு நாளை (ஜூலை 19) காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் சார்பில் கூட்டத்தொடரின் முக்கியத்துவம் மற்றும் முன்வைக்கப்பட உள்ள மசோதாக்கள் குறித்து விளக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 7 முக்கிய மசோதாக்களைத் தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
வருமான வரி (திருத்த) மசோதா, 2026, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை (திருத்த) மசோதா, 2026, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை (திருத்த) மசோதா, 2026 (FCRA), வளர்ந்த பாரத கல்வி நிறுவனம் மசோதா, 2025, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்த) மசோதா, 2026, தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு (திருத்த) மசோதா, 2026 உள்ளிட்ட மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மறுபுறம், இந்த கூட்டத்தொடரில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன.
