ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து 7வது நாளாகத் தனது வான்வழி மற்றும் கடற்படைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில நாட்களாக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து 7-வது நாளாகத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உத்தரவின் பேரில், அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்கள், ட்ரோன்கள் மற்றும் போர்க்கப்பல்களைப் பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கப் படைகளின் தாக்குதல் ஈரானின் ராணுவக் கட்டமைப்புகளைச் சிதைக்கும் நோக்கில் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. கண்காணிப்பு தளங்கள், ராணுவ தளவாட உள்கட்டமைப்புகள், நிலத்தடி ஆயுதக் கிடங்குகள், கடற்படைத் திறன்கள் ஆகியவை பிரதான இலக்குகளாக இருந்ததாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள பாலங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் தனது படைகள் மூலம் அமெரிக்காவின் நட்பு நாடுகளான குவைத், ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது. குவைத்தில் உள்ள ராணுவத் தளங்கள் மற்றும் ஜோர்டானில் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை ஈரான் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஜோர்டான் நாட்டு எல்லைக்குள் நுழைந்த 10 ஈரானிய ஏவுகணைகளைத் தாங்கள் இடைமறித்து அழித்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்களில் ஈரான் தரப்பில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாகவும் ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தைப் பாதிக்கும் என்பதால் சர்வதேச அளவில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version