கோவை ராமநாதபுரம் அருகே நேற்று இரவு இருசக்கர வாகனம் மீது பிக்கப் வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இளைஞர் சாலையில் தூக்கிவீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கோவை ராமநாதபுரம் அடுத்த சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஷியாம். இவர் தனது நண்பரான புலியகுளம் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது,
பங்கஜா மில் அருகே பின்னால் வந்த பிக்கப் வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனம் சாலையிடை தடுப்பு சுவரில் மோதியதில் ஷியாம் சுவற்றில் மோதி தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். படுகாயம் அடைந்த வினோத் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து நிகழ்ந்த அடுத்த வினாடியே இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்த நிலையில், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். விபத்து சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
