1997-ல் மாணவர் போராட்டத்தில் காவல்துறையின் தடியடியால் ரத்தக் காயங்களுடன் போராடிய தர்மேந்திர பிரதான், இன்று அதே வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் போராடும் விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சராகக் கேள்விகளை எதிர்கொண்டு வருவது மிகப்பெரிய வரலாற்று முரணாக மாறியுள்ளது.
மூன்று தசாப்தங்களுக்கு முன்பு, காவல்துறையின் தடியடிக்கு ஆளானவர்களில் ஒருவராக தர்மேந்திர பிரதான் இருந்தார். 1997-ல், ஏபிவிபி அமைப்பின் தேசியச் செயலாளராக இருந்த அவர், ஒடிசாவில் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாநிலச் செயலகத்திற்கு வெளியே 1,500 மாணவர்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தினார். அப்போது காவல்துறை தடியடி நடத்தியது. இதில் பிரதான் கடுமையாகத் தாக்கப்பட்டு, எலும்பு முறிவுகளுக்கு ஆளானார்.
காயங்களுடனும் ரத்தக் கறையுடனும் அவர் இருந்த புகைப்படம், மாணவர் போராட்டத்தின் அடையாளமாக மாறியது. இன்று, தேசிய அளவிலான தேர்வில் வினாத்தாள் கசிவு என்ற அதே போன்றதொரு விவகாரத்திற்காக, அவரது ராஜினாமாவை வலியுறுத்தி நாடாளுமன்றத்திற்கு வெளியே மாணவர்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது.
இந்தப் போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில், அன்றைக்கு மாணவர்களுக்காகத் தடியடியைச் சந்தித்த அதே தர்மேந்திர பிரதான், இன்று மாணவர்களின் எதிர்ப்பையும் ராஜினாமா கோரிக்கையையும் எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
