அடுத்தாண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க ஏதுவாக தமிழக பாஜவுக்கு தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த தேர்தலை சந்திக்க அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த அமித்ஷா இன்று தமிழகம் வருகை தர இருந்தார், ஆனால், பல்வேறு குழப்பங்களால் அவரது வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தேர்தலை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜவும் ஏற்பாடு செய்து வருகிறது. பல இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தவும், அதற்கு மேலிட தலைவர்களை அழைத்து வரவும் திட்டமிட்டுள்ளது.
அந்தவகையில் தற்போது சட்டசபை தேர்தலை சந்திக்க ஏதுவாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தலைமை அலுவலக பொறுப்பாளருமான அருண் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, பிரச்சார வியூகம் உள்ளிட்ட விஷயங்களிலும் இவர் முக்கிய பங்காற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், மேலும் 3 மத்திய அமைச்சர்களும் இந்த பணியில் ஈடுபடவுள்ளனர்.
அந்தவகையில், மத்திய அமைச்சர்களான அருண் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் ஆகியோர் இணை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நயினார் நாகேந்திரன் – அமித்ஷா சந்திப்பை தொடர்ந்து தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், இந்த நியமனங்கள் உடனடி அமலுக்கு வரும் என்றும், தமிழ்நாட்டில் கட்சியின் தேர்தல் தயாரிப்புகளை வேகப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமன அறிவிப்பு தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகிகள், தலைவர் மற்றும் அமைப்பு செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
