குஜராத் மாநிலத்தில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடவும், தங்களது பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கத்தை விரிவுபடுத்தவும் திட்டமிட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ‘ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 8 பேரை அம்மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிரடியாகக் கைது செய்துள்ளது.

கடந்த 6 மாதங்களாகவே இந்த அமைப்பு குஜராத்தில் ஒரு வலுவான பயங்கரவாத வலையமைப்பை உருவாக்க ரகசியமாகச் செயல்பட்டு வந்தது. முக்கியப் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்கு முன்பாகவே, புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் குஜராத் ஏடிஎஸ் இந்தத் திட்டத்தைக் முறியடித்துள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக, குஜராத்தின் பனஸ்கந்தா, பதான், நவ்சாரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் ஆகிய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் அகமது அப்துல்லா காஜிவாலா (19), இப்ராகிம் முகமது ஹுசேன் ககா (30), முதாசிர் அப்துல்லா காஜிவாலா (22), ஜகாரியா துரானி முகமது அம்மார் ககா (21), முப்தி ஃபாஜான் இஸ்மாயில் டாவா (40), முகமது அமின் ஷேரா (21), முகமது அப்துல் ரஹ்மான் சாவ் (22) மற்றும் பிலால் துரானி முகமது அம்மார் ககா (18) ஆகியோர் அடங்குவர். இவர்களில் சிலர் மதக்கல்வி நிலையங்களுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட 8 பேர் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்  கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் இந்திய அரசுக்கு எதிராகப் போரிட சதி செய்தல் மற்றும் குற்றச் சதி போன்ற கடுமையான பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தக் கும்பல் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதக் கொள்கைகளை பரப்பவும், மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்கவும் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது இவர்களது நிதி ஆதாரங்கள், வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளுடன் உள்ள தொடர்பு குறித்து ஏடிஎஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version