முதலமைச்சர் விஜய் குறித்துப் பொதுக்கூட்டத்தில் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக எழுந்த புகாரில், திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஜூன் 20 அன்று திருச்செந்தூர் அருகே ஆத்தூரில் நடைபெற்ற கருணாநிதியின் பிறந்தநாள் விழாக் கூட்டத்தில், முதலமைச்சர் விஜய் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது தொடர்பாகத் தவெக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணனிடம் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வைத்து காவல்துறையினர் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காக காவல்துறையினர் அவரை வெளியே அழைத்து வந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். “என்னைத் தவெக-வில் இணையச் சொல்லியும், அதற்காக எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யச் சொல்லியும் வற்புறுத்தினார்கள்.நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. மிரட்டல்களுக்குப் பணியாததால் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கை. நான் என்றும், எப்போதும் திமுக-வில்தான் இருப்பேன்” என்று அவர் ஆவேசமாக முழங்கினார். அனிதா ராதாகிருஷ்ணனின் இந்தக் குற்றச்சாட்டு தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்த நிலையில், விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பின் அனிதா ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார். இந்த கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் விஜய் சினிமா ஆக்ஷன் பாணியில் ‘போலீஸ் ராஜ்ஜியம்’ நடத்துவதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

