இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டது தொடர்பாக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இத்தகைய ஆபத்தான விளம்பரங்கள் எவ்வாறு தணிக்கையைத் தாண்டி நேரலையில் ஒளிபரப்பாகின்றன என்பது குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு மெட்டாவிடம் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பிபிசி நடத்திய ஆய்வில், இன்ஸ்டாகிராமில் கட்டண விளம்பரங்கள் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வீடியோக்கள் விளம்பரப்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது. இந்த விளம்பரங்களில் டெலிகிராம் சேனல்களுக்கான இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன, அங்கு மிகக் குறைந்த விலையில் (ரூ. 99) இத்தகைய வீடியோக்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெட்டாவின் தொழில்நுட்பக் கண்காணிப்பைத் தாண்டி இந்த விளம்பரங்கள் எவ்வாறு அனுமதி பெறுகின்றன என்பதே மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

முதலில் இது தொடர்பாக புகார் அளித்தபோது, இந்த விளம்பரங்கள் தங்களின் சமூக வழிகாட்டுதல்களை மீறவில்லை என்று இன்ஸ்டாகிராம் அலட்சியமாகப் பதிலளித்திருந்தது. தற்போது, அரசின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனம் “குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வீடியோக்களுக்கு எதிராக பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளோம். இத்தகைய குற்றவாளிகளைக் கண்டறிய மேம்பட்ட ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து மெட்டா நிறுவன அதிகாரிகள் இன்று மத்திய அமைச்சக அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இதற்கிடையில், வாட்ஸ்அப்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘usernames’ அம்சம் குறித்தும் அரசு கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விரிவான விளக்கத்தை அடுத்த 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு மெட்டாவிற்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

குழந்தைப் பாதுகாப்பு விவகாரத்தில் சமூக ஊடகத் தளங்களின் பொறுப்பற்ற செயல்பாடு இந்தியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version