கடந்த 2021 முதல் பிரதமர் நரேந்திர மோடி 44 வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டு 65 நாடுகளுக்கு சென்றுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த வெளிநாட்டு பயணங்களின்போது மொத்தம் 316 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2026-ஆம் ஆண்டில் மட்டும் பிரதமர் மோடி இதுவரை 13 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் நார்வே பயணமே அதிக செலவானதாக இருந்து, அதற்காக ரூ.12.46 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி:
2021 – ரூ.36.18 கோடி
2022 – ரூ.55.81 கோடி
2023 – ரூ.102.12 கோடி
2024 – ரூ.100.58 கோடி
2025 – ரூ.67 கோடிக்கும் மேல் (இது தற்காலிக மதிப்பீடு; சில பயணங்களின் கணக்குகள் இன்னும் முடிக்கப்படவில்லை.)
மே 2022 முதல் டிசம்பர் 2024 வரை பிரதமர் மோடியின் 38 வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.258 கோடி செலவிடப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜூன் 2023-இல் அமெரிக்கா பயணம் – ரூ.22.89 கோடி
செப்டம்பர் 2024-இல் அமெரிக்கா பயணம் – ரூ.15.34 கோடி
2025-இல், டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு நடைபெற்ற அமெரிக்க பயணத்திற்கு – ரூ.16.54 கோடி
ஏப்ரல் 2021 முதல் டிசம்பர் 2025 வரை, இந்தியாவுக்கு 381.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அந்நிய நேரடி முதலீடு (FDI) கிடைத்துள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில்,
“பிரதமரின் உயர்மட்ட வெளிநாட்டு பயணங்கள், பிற நாடுகளுடனான உறவை வலுப்படுத்தவும், இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய அளவில் இந்தியாவின் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் முக்கியமான வழிமுறையாக உள்ளன.”
மேலும், “இந்தப் பயணங்கள் மூலம் கையெழுத்தாகும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள், தொழில்நுட்பம், புதுமை, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் வலுவான விநியோகச் சங்கிலி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவின் கூட்டாண்மையை வலுப்படுத்துகின்றன” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
