இனி ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் இந்திய ராணுவத்தின்பதிலடி பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இந்ததிட்டத்தின்படி, 508 ரயில் நிலையங்களை, ரூ.24,470 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வந்தன. தெற்கு ரயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.
அதன்படி நாடு முழுதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார். ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில், பிகானீர்- மும்பை விரைவு ரயிலை கொடியசைத்து பிரதமர் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் சென்னை பரங்கி மலை, சிதம்பரம், மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், சாமல்பட்டி ஆகிய 9 ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டன.
புதிதாக திறக்கப்பட்ட ரயில்நிலையங்களில், லிப்ட், நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடை, பயணியர் காத்திருப்பு அறைகள், நுழைவாயில்கள் சீரமைப்பு, எஸ்கலேட்டர்கள், மல்டி லெவல் பார்க்கிங், ‘சிசிடிவி’ கேமரா உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன.
முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் மாவட்டத்தில் உள்ள கர்ணி மாதா ஆலயத்திற்கு சென்ற பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.
ரயில்நிலையங்கள் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பிகானீர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ரூ.26,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில், மக்களை வாழ்த்துவதாக தெரிவித்தார்.
இந்தியாவுக்கு எதிரான நேரடி போரில் பாகிஸ்தானால் ஒரு போதும் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவுக்கு சொந்தமான தண்ணீரை பாகிஸ்தானால் பெற முடியாது என்று குறிப்பிட்டார். இந்திய ராணுவத்தின் சக்ர வியூகத்தால் பாகிஸ்தான் மண்டியிட்டுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார். இனி இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாட நினைத்தால், பாகிஸ்தான் பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் இனி ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் இந்திய ராணுவத்தின் பதிலடி கடுமையாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அணு ஆயுத அச்சறுத்தலுக்கு இந்தியா பயப்படப்போவதில்லை என்று கூறிய அவர், நமது ராணுவத்தின் துணிச்சலால் வலுவாக இருப்பதாக தெரிவித்தார். பாகிஸ்தானுடன் இனி எந்த வகையிலும் பேச்சு என்பதே கிடையாது என்றும் அப்படி பேசினால், அது பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பற்றியதாக மட்டுமே இருக்கும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.