இந்திய பிரதமர் மோடி மோடி ஒரு வாரம் பயணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாகியா நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்கிறார்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய மைல்கல்லாகப் பதிவாகவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் ஐரோப்பிய சுற்றுப்பயணம் ஜூன் 13ஆம் தேதி தொடங்குகிறது. ஒரு வார கால அரசுமுறை பயணமாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்த பயணம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதோடு, பொருளாதார முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய சவால்களுக்கு இணைந்த தீர்வு காணும் விவாதங்களுக்கும் வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி ஜூன் 13ஆம் தேதி இந்தியாவிலிருந்து புறப்பட்டு பிரான்ஸின் நீஸ் நகரைச் சென்றடைய உள்ளார். அங்கு ஜூன் 14ஆம் தேதி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் இருதரப்புச் சந்திப்பு நடைபெறும். இந்தியா-பிரான்ஸ் இடையிலான மூலோபாயப் பங்காளித்துவத்தை மேலும் ஆழப்படுத்தும் வகையில் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு, புதிய தொழில்நுட்பப் பரிமாற்றம், எரிசக்தி, விண்வெளி மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவான விவாதங்கள் நடைபெறும். இரு தலைவர்களும் இணைந்து “Bharat Innovates” என்ற சிறப்பு நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க உள்ளனர்.
இந்தியாவின் ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல், புதுமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை உலக அரங்கில் கொண்டாடும் முக்கிய நிகழ்வாக இது அமையும். பிரான்ஸ் நிறுவனங்களுடன் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இணைந்து பணியாற்ற புதிய வாய்ப்புகளை இந்நிகழ்ச்சி உருவாக்கும் எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஜூன் 14 முதல் 16 வரை பிரதமர் மோடி ஸ்லோவாகியா செல்ல உள்ளார். 1993ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகு ஸ்லோவாகியாவுக்குச் செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை மோடிக்கு உரியதாகும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின்போது வர்த்தகம், தொழில் முதலீடு, உற்பத்தித் துறை ஒத்துழைப்பு மற்றும் கல்வித் துறை இணைப்புகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். மத்திய ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியா தனது உறவுகளை விரிவுபடுத்தும் முயற்சியில் இந்த விஜயம் முக்கியப் பங்கு வகிக்கும். பின்னர் ஜூன் 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை பாரீஸில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பார்.
உலகப் பொருளாதார நிலை, பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், காலநிலை மாற்றம், சர்வதேச வளர்ச்சி மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு ஆகிய முக்கியப் பிரச்னைகளில் இந்தியாவின் தெளிவான நிலைப்பாட்டை அவர் முன்வைப்பார். இந்தச் சுற்றுப்பயணம் இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கை மேலும் உயர்த்தும், புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளைப் பலப்படுத்தும் என வெளியுறவு நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
