காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் நிலவுவதால், உழவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக மாற்று நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு குறுவை சாகுபடி தொடங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை தொடர்ந்ததால், குறுவை சாகுபடி பரப்பளவு தொடர்ந்து உயர்ந்து, கடந்த ஆண்டு 6.31 லட்சம் ஏக்கர் என்ற சாதனை அளவை எட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணையின் நீர் இருப்பு போதுமான அளவில் இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. மேலும், கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு அணைகளிலும் நீர் சேமிப்பு குறைவாக இருப்பதுடன், தென்மேற்கு பருவமழையும் எதிர்பார்த்த அளவில் பெய்யாததால், தமிழகத்திற்கு விரைவில் காவிரி நீர் கிடைக்கும் வாய்ப்பு குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலை காரணமாக குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளதாகவும், நிலத்தடி நீரை நம்பி சில பகுதிகளில் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டிருந்தாலும், தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் விவசாயிகள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் விளைவாக ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களும், லட்சக்கணக்கான வேளாண் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவதுடன், சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான உற்பத்தி இழப்பு ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
எனவே காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து நிவாரண உதவிகளை வழங்க வேண்டும், வானிலை நிபுணர்கள், வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இணைந்து ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும், குறுவைத் தொகுப்புத் திட்டத்தை இடுபொருள் மானியத்துடன் செயல்படுத்த வேண்டும், மேலும் குறைந்தது 3 முதல் 4 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
