தமிழ் திரையுலகில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு, 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தன் தனித்துவமான நடிப்பால் பெரும் பெயர் பெற்ற முன்னணி நடிகர் ராஜேஷ் (வயது 76), இன்று (29.05.2025) அதிகாலை உடல்நலக் குறைவு காரணமாக சென்னை நகரில் காலமானார். மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தனது திரை வாழ்க்கையில், முதன்மை கதாபாத்திரங்களிலிருந்து முக்கியமான துணைக் கதாபாத்திரங்கள் வரை நடித்து வரவேற்பு பெற்ற ராஜேஷ், சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மெரி கிறிஸ்துமஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.
திரைப்படத் துறையுடன் இணைந்ததோடு, யூடியூப் தளத்தில் ஓம் சரவண பவ என்ற சேனலில் ஜோதிடம் தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியில் பல பிரபல ஜோதிட நிபுணர்களையும், மருத்துவத் துறையில் சிறந்து விளங்கும் நபர்களையும் நேர்முகமாக பேட்டி எடுத்து மக்கள் மத்தியில் கவனம் பெற்றார்.
மேலும், தமிழக அரசின் எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றிய ராஜேஷ், திரையுலக வளர்ச்சிக்காக பல்வேறு பயிற்சிகள் மற்றும் திட்டங்களை முன்னெடுத்தவர்.
அவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப் பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் தங்கள் ஆழ்ந்த இரங்கலையும், நினைவுகளையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.