அமெரிக்காவில் 5 நாட்கள் நடைபெற்ற இந்தத் தொடரில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 வீரர்கள் பங்கேற்றிருந்தனர். இந்தியாவின் 20 வயது இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா இத்தொடரின் கடைசிக்கு முந்தைய சுற்றில் உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தரோவை எதிர்கொண்டார்.
பிரக்ஞானந்தா 23 புள்ளிகளுடனும், ஜவோகிர் 21.5 புள்ளிகளுடனும் முதல் இரு இடங்களில் பிடித்த நிலையில், இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்றில் இருவரும் மோதிக் கொண்டனர்.
இருவரும் சமபலத்துடன் மோதியதால் ஆட்டம் டிராவில் முடிந்தது. எனவே ஒரு சுற்று எஞ்சியிருந்த போதே, மொத்தம் 35 புள்ளிகளில் 23.5 புள்ளிகளைப் பெற்ற பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
பிரக்ஞானந்தா வெல்லும் முதல் ராபிட் அண்ட் பிளிட்ஸ் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜவோகிர் சிண்டாரோவ் 2ஆம் இடம் பிடித்தார். சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு சுமார் ரூ.47 லட்சம் பரிசுத் தொகையையும், 13 ஜிசிடி புள்ளிகளையும் வென்றுள்ளார்.
இதன் மூலம் 2026ஆம் ஆண்டிற்கான ஜிசிடி சீசன் தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அடுத்ததக வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி துவங்கும் ஜிசிடி சீசனின் இறுதித் தொடரான சின்க்பீல்ட் கோப்பை தொடரில் பிரக்ஞானந்தா பங்கேற்க உள்ளார்.
கடந்த ஜூன் மாதம் ஓஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரின் 10வது மற்றும் இறுதிச் சுற்றில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வீழ்த்திய பிரக்ஞானந்தா, தொடர்ச்சியாக 4 கிளாசிக்கல் வெற்றிகளைப் பதிவு செய்து நார்வே செஸ் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார்.
