தமிழக அரசியலில் குதிரை பேரம் நடைபெறவில்லை என்பதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதன் முதல் நாளான இன்று விருத்தாச்சலம் வந்த அவர், பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தேர்தல் பிரச்சாரத்தின்போது தாம் அளித்த முக்கிய வாக்குறுதியான விருத்தாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கும் முயற்சியில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவதாக உறுதியளித்தார். மேலும், தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்ட அனைத்து திட்டங்களையும் குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தில் தாம் எழுப்பிய ரத்தன் பண்டிட் நியமனம் தொடர்பான கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த அவர், 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவதற்கும், பெண்கள் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண் காவல்’ திட்டத்தை அறிவித்ததற்கும் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தார்.
தற்போதைய அரசு சமூக ஊடகங்கள் மற்றும் ரீல்ஸ் மீது அதிகம் சார்ந்துள்ளதாகவும், மக்களின் உணர்வுகளைப் புரிந்து, நடைமுறைச் சாத்தியமான திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மகளிர் உரிமைத் தொகையை தற்போதைய ரூ.1,000-லிருந்து தவெக வாக்குறுதியின்படி ரூ.2,500-ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். தவெக சட்டமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதி குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அதை தமிழக வெற்றி கழகத்திடம் கேளுங்கள்” என்று பதிலளித்தார்.
தற்போதைய அரசியல் சூழல் குறித்து பேசிய பிரேமலதா, “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்த கட்சிகள் சில நிபந்தனைகளுடன் ஆதரவு அளித்துள்ளன. அதேபோல் அதிமுகவிலிருந்து பிரிந்து வந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தால் வரவேற்கலாம். இல்லையென்றால் குதிரை பேரம் நடைபெற்றதாகவே பொதுமக்கள் எண்ணுவார்கள்” என்றார். முகத்தை மூடிக்கொண்டு முதல்வரை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் யார் என்பதையும், ஒரு குழு அதிமுக உறுப்பினர்களை முதல்வர் ஏன் சந்தித்தார் என்பதையும் விளக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், “எந்த விதமான குதிரை பேரமும் நடைபெறவில்லை என்பதை முதல்வரே பொதுமக்கள் முன்னிலையில் உறுதி செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
விருத்தாச்சலம் தொகுதி மக்களின் அன்பான ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அடுத்த இரு நாட்களும் பல்வேறு பகுதிகளில் அவர் சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப்பயணம் தொகுதி மக்களின் பிரச்னைகளை நேரடியாக அறிந்து, அரசுக்கு கொண்டு செல்ல உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

