வெள்ளை மாளிகைக்கு வருகை தர வேண்டுமென்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சார்பாக பிரதமர் மோடிக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அழைப்பு விடுத்தார்.

நான்கு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இன்று (மே 23) இந்தியா வந்தார். டெல்லியில் பிரதமர் மோடியைச் அவர் சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியா – அமெரிக்கா இடையிலான விரிவான உலகளாவிய மூலோபாயக் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி, மார்கோ ரூபியோ இருவரும் விவாதித்தனர்.

பிரதமர் மோடியை விரைவில் அமெரிக்கா வருமாறு அதிபர் டிரம்ப் சார்பில் மார்கோ ரூபியோ அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்தார்.

மத்திய கிழக்கு ஆசியப் பகுதியில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும், அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் மோதல்களைத் தீர்ப்பதன் அவசியம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது பயணத்தின் முதல் பகுதியாக இன்று (மே 23) கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரசா இல்லம் மற்றும் நிர்மலா சிசு பவனுக்குச் சென்ற அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, அதனைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து டெல்லி சென்று பிரதமரை அவர் சந்தித்தார்.

இதனிடையே நாளை (மே 24) வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை மார்கோ ரூபியோ சந்தித்துப் பேச உள்ளார். பின்னர் ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்கு அவர் செல்கிறார். இறுதியாக, மே 26 டெல்லியில் நடைபெற உள்ள குவாட் (Quad) அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் மார்கோ ரூபியோ பங்கேற்க உள்ளார்.

இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தகத்தை 2030-க்குள் இருமடங்காக உயர்த்தும் “மிஷன் 500” (Mission 500) திட்டத்தின் கீழ் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து இரு தரப்பும் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version