மத்திய அமைச்சகங்களின் அனைத்து செயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார். 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதை இலக்காகக் கொண்டு இந்த முக்கியக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில். நிர்வாக சீர்திருத்தங்கள், மக்கள் எளிதாக வாழ்வதற்கான சூழல் மற்றும் தொழில் தொடங்குவதை எளிதாக்குதல் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

மேலும், பல்வேறு அமைச்சகங்களின் செயலாளர்கள் தங்களது துறைகளின் செயல்பாடுகள், சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் விளக்கமளிக்க உள்ளனர். மக்களின் வாழ்க்கையை மேலும் வசதியானதாக மாற்றுவதற்கும், அரசுப் பணிகளில் தேக்கநிலை இல்லாமல் விரைவாக மக்கள் திட்டங்களைச் சென்றடையச் செய்வதற்கும் தேவையான அடுத்தகட்ட சீர்திருத்தங்களை பிரதமர் ஆய்வு செய்யவுள்ளார்.

அதாவது, நடப்பு 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.7 சதவீதமாகவும், கடைசி காலாண்டில் 7.8 சதவீதமாகவும் உயர்ந்து வலுவான பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ள பின்னணியில் இக்கூட்டம் நடைபெறுகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கான சீர்திருத்த முன்னுரிமைகளை ஏற்கனவே வகுத்துள்ள பிரதமர், திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் செயலாளர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தவுள்ளார்.

இன்றைய கூட்டத்தில் பிரதமரின் முதன்மைச் செயலாளர்கள் பி.கே. மிஷ்ரா, சக்திகாந்த தாஸ் மற்றும் கேபினட் செயலாளர் டி.வி. சோமநாதன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version