செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில், புனித விண்ணரசி அன்னை ஆலயத்திற்கு அருகே செயல்பட்டு வந்த அரசு டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க முயற்சி நடைபெறுவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 40 ஆண்டுகளாக வழிபாட்டுத் தலமாக செயல்பட்டு வரும் ஆலயத்திற்கு அருகே உள்ள இந்த மதுபானக் கடை, பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பெரும் இடையூறாக இருந்ததால், கடந்த மார்ச் மாதம் அரசு உத்தரவின் பேரில் மூடப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது மீண்டும் கடையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறி, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள், தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், மதுக்கடையுடன் இணைந்துள்ள மதுக்கூடத்தின் உரிமத்தை நீட்டிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர்.

இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version