தமிழக பள்ளிகளில் மாணவர்களின் உடற்திறன் மற்றும் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில், உடற்கல்வி நேரத்தை (PT Period) எந்த காரணத்திற்காகவும் ரத்து செய்யக்கூடாது என்று பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளார்.
கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு விளையாட்டும் உடற்கல்வியும் அவசியம் என்பதால், பள்ளிகளில் வாரத்திற்கு ஒதுக்கப்படும் பாடவேளைகளில் குறைந்தது 8 பீரியட்கள் உடற்கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்றார்.
“எந்தவொரு பள்ளியிலும் பிடி பீரியட் இனி ரத்து செய்யப்படக் கூடாது” என்று உத்தரவிட்டுள்ள அமைச்சர், ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்கள் சாதனை படைப்பதே அரசின் நீண்டகால இலக்கு எனக் குறிப்பிட்டார்.
மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் சட்டச் சிக்கல்கள் இன்றி விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். இதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் உள்ளிட்ட நவீன வசதிகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வருவதாகவும், அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்
