கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்கி தரப்படும் என புழல் சிறை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
சென்னைய சேர்ந்த எம்.தமிழழகன் என்பவர் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில், சென்னை புழல் மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் உள்ளதாகவும், இவர்களுக்கு சட்ட ரீதியாக உதவி வழங்குவதற்கான வசதிகள் மிகவும் குறைவாக உள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நதியா, புழல் சிறையில் கைதிகளை வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள் சந்திப்பதற்காக 16 கேபின்கள் அமைக்கப்பட்டு, தினமும் 3 முறை தலா அரை மணிநேரம் ஒதுக்கப்பட்டு வாய்ப்பு தரப்படுவதாக கூறினார்.
இதில் 8 கேபின்களில் தொலைபேசி மூலமாகவும், 8 கேபின்களில் நேரடியாகவும் கைதிகளுடன் பேச முடியும் என்றும், அனுமதிக்கப்பட்ட அரை மணிநேரத்தில் 5 கைதிகளை சந்திக்க வேண்டிய நிலை உள்ளதால் கைதிகளுக்கு சட்டரீதியான ஆலோசனைகளை வழங்க முடியவில்லை எனக் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையக்குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் அன்புமணி, புழல் சிறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் வழக்கறிஞர்கள் கைதிகளை சந்திப்பதற்கு உரிய வசதிகள் தற்போது உள்ளதாக தெரிவித்தார்.
புழல் சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.தினேஷ், மனுதாரரின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கைதிகளை சந்திப்பதற்கான ஷ்லாட்டுகளின் எண்ணிக்கையை ஆறிலிருந்து எட்டாக உயர்த்த முடிவு செய்துள்ளதாகவும் விரைவில் அது அமல்படுத்தப்படும் என உறுதியளித்தார்.
இந்த உத்தரவாதத்தை விரைவில் அமல்படுத்த உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.
