காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இன்று (ஜூன் 17) ராஜஸ்தானின் கோட்டாவில் “எக்கோ ஆஃப் ஸ்டூடன்ட்ஸ்” (Echo of Students) என்ற பெயரில் பிரம்மாண்ட மாணவர் பேரணியை நடத்துகிறார்.
நீட், யூஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு, அரசு வேலைவாய்ப்பு தேர்வுகளில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் மாணவர்கள், வேலைவாய்ப்பு தேடுபவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவை இந்த பேரணியின் முக்கிய அம்சங்களாக உள்ளன.
முன்னதாக நாட்டின் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் இந்த பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள ராகுல் காந்தி, “இளைஞர்களின் எதிர்காலமே நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். ஆனால் அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் பொறுப்பில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது” என்று குற்றம்சாட்டினார்.
எக்ஸ் தளத்தில் ராகுல்காந்தி வெளியிட்ட பதிவில், “வினாத்தாள் கசிவுகள், தேர்வு நிர்வாகக் குளறுபடிகள், ரத்து செய்யப்படும் ஆட்சேர்ப்புகள், உயர்ந்து வரும் கல்விக் கட்டணங்கள், தனியார்மயமாக்கல் மற்றும் ஊழல்கள் ஆகியவை கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவுகளை சிதைத்துக் கொண்டிருக்கின்றன” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது அரசின் கடமை. ஆனால் பொறுப்புணர்வும் நேர்மையும் மோடி அரசின் சிந்தனையில் இல்லை” என்றும் ராகுல் காந்தி விமர்சித்தார்.
இந்த நிலையில், ராஜஸ்தானின் பாஜக அரசு, இந்த நிகழ்ச்சியை சீர்குலைக்க முயற்சிப்பதாக முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் குற்றம்சாட்டினார்.
கோட்டாவில் ராகுல் காந்தி நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளை நிர்வாகம் அகற்றி வருவதாகவும், அதே நேரத்தில் பாஜக நிகழ்ச்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் இளைஞர் இயக்கத்திற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறிய அவர், ஐஐடி மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய பயிற்சி மையமாக விளங்கும் கோட்டாவில் இருந்து இந்த பிரச்சாரத்தை தொடங்குவது முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.
மேலும், நீட் மற்றும் எஸ்எஸ்சி உள்ளிட்ட தேர்வுகளில் தொடர்ச்சியாக வெளிவரும் வினாத்தாள் கசிவுகள், இளைஞர்களின் நம்பிக்கையை முற்றிலும் சிதைத்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அதேவேளை, பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாஅட்டியா, ராகுல் காந்தியின் பேரணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
‘போலி காந்தி’ தொடரின் மற்றொரு தோல்வி அத்தியாயம் அரங்கேற உள்லஹாகவும், இளைஞர்களை தவறாக வழிநடத்தவும், தனது அரசியல் செல்வாக்கை உயர்த்திக்கொள்ளவும் ராகுல் காந்தி முயற்சிக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, நீட்-யூஜி 2026 மறுதேர்வு ஜூன் 21 அன்று பிற்பகல் 2 மணி முதல் 5.15 மணி வரை நடைபெற உள்ளது. மே 3 அன்று நடைபெற்ற தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையால் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை (NTA) மறுதேர்வை அறிவித்துள்ளது.
