தமிழக வெற்றிக் கழக அரசில் நிறைய தவறு நடக்கிறது, அதை சுட்டிக் காட்டுகின்றோம், என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்தும், அதிமுகவின் அடுத்த கட்ட வளர்ச்சி பணிகள் குறித்தும் இன்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விருதுநகர் கிழக்கு மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்ட தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அதிமுகவினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் விருதுநகர் மாவட்டத்திலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட மாவட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,
கட்சியின் வளர்ச்சிக்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைந்த விருதுநகர் கிழக்கு, மேற்கு இரண்டு மாவட்டங்களை அழைத்து பேசி உற்சாகப்படுத்தி வழி அனுப்பி வைத்துள்ளார். வலிமையான, வலுவான இயக்கமாக அதிமுக வரும் அதற்கு பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்க்,
இன்று ஆளுகிற இடத்தில் தமிழக வெற்றிக் கழகம் இருக்கிறது, ஆளுங்கட்சியை நோக்கி தான் எங்களுடைய விமர்சனம் வரும், அதை உடனே அதிமுக – திமுக ஒன்று சேருகிறது என கூறக்கூடாது,
அவர்களின் விமர்சனத்தை, நாங்களும் விமர்சனமாக வைக்கின்றோம் எனத் தெளிவு படுத்தினார்.
விமர்சனம் வைக்கும் அளவிற்கு தமிழக வெற்றிக்கழக அரசிடம் நிறைய தவறு நடப்பதால் அதனைச் சுட்டிக்காட்டுவதாகக் கூறியராஜேந்திர பாலாஜி, தமிழ்நாட்டில் நடக்கும் வேடிக்கை விளம்பரம் மாடல் ஆட்சியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிவித்தார்.
