தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக தமிழக வெற்றி கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சட்டசபை தேர்தலின் போது மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சி.வி. சண்முகம் வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தனது ராஜ்யசபா எம்பி பதவியை சி.வி.சண்முகம் ராஜினாமா செய்தார். சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ததால் அந்த ஒரு ராஜ்யசபா இடம் காலியானதாகவும், ஜுன் 18ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 1ம் தேதி தொடங்கி ஜுன் 8ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஜூன் 9ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என்றும் ஜூன் 11ம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்தநிலையில், அந்த ராஜ்யசபா உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக தமிழக வெற்றி கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக, தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யை, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, காலியாக உள்ள ராஜ்யசபா சீட்டை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு, விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஏற்கெனவே, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரும் முதலமைச்சரைச் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து, இந்த முக்கிய முடிவு எட்டப்பட்டுள்ளது.

காங்கிரஸின் தொடர் பேச்சுவார்த்தைக்குப் பின், அந்த ஒரு ராஜ்யசபா பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி தமிழக வெற்றி கழகம் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தவெக – காங்கிரஸ் இடையேயான இந்த அரசியல் நகர்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. வரும் 18ம் தேதி தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version