கோவை சூலூர் கண்ணம்பாளையத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் அவனது கூட்டாளி மோகன்ராஜ் ஆகிய இருவரைப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் குற்றவாளிகளிடம் இருந்து மேலும் பல முக்கியத் தடயங்கள், வாக்குமூலங்கள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய பொருட்களைப் பறிமுதல் செய்ய வேண்டி உள்ளதால், அவர்களை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இதற்கு இடையே, சிறைக்குள் சக கைதிகளால் தாக்கப்பட்டுக் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முக்கியக் குற்றவாளி கார்த்திக் மற்றும் அவனது கூட்டாளி மோகன்ராஜ் ஆகிய இருவரையும் பலத்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இன்று கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ (POCSO) சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் நீதிமன்ற வளாகத்தில் நிலவிய பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கோவை போக்சோ நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள், நீதிமன்றத்தின் கதவுகளைப் பூட்டி, “இன்-கேமரா” (In-Camera Proceedings) முறையில் பூட்டிய அறையில் வைத்து இருவரிடமும் தனித் தனியே தீவிர விசாரணை நடத்தினார்.

காவல்துறை தரப்பில் குற்றவாளிகளை விசாரித்துச் சாட்சியங்களைச் சேகரிக்க 5 நாட்கள் நீதிமன்றக் காவல் கட்டாயம் தேவை என அரசு வழக்கறிஞர் தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்டறிந்த நீதிபதி பகவதி அம்மாள், காவல் துறையின் 5 நாட்கள் கோரிக்கையைச் சற்றே குறைத்து, 3 நாட்கள் மட்டும் (ஜூன் 6-ஆம் தேதி வரை) இருவரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி அதிரடி உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளிகளை காவல்துறையினர் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று, சூலூர் கொடூரக் கொலைச் சம்பவம் குறித்துக் கோவை மாவட்ட தனிப்படை போலீஸார் “கஸ்டடி” விசாரணையைத் தொடங்குவதற்கு தற்பொழுது துரிதப்படுத்தி உள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version