இன்ஸ்டாகிராம் தளத்தில் குழந்தைத் துஷ்பிரயோகம் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் உள்ளடக்கம் இடம்பெறுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனத்திற்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்  அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குழந்தைகளைச் சித்திரவதை செய்யும் மற்றும் துஷ்பிரயோகம் செய்யும் உள்ளடக்கங்களை  ஊக்குவிக்கும் அல்லது அதற்கு வழிவகுக்கும் அனைத்து விளம்பரங்களையும் உடனடியாக நீக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தை மத்திய அரசு மிக தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் இத்தகைய ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கங்கள் எப்படி இடம்பெற்றன, இதற்குப் பொறுப்பானவர்கள் யார் மற்றும் எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்களைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து, ஏழு நாட்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக, இன்ஸ்டாகிராம் தளத்தில் உள்ள செயல்முறை விதிகள் இத்தகைய உள்ளடக்கங்களை அதிக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சில விளம்பரங்கள் மூலம் பயனர்களை சட்டவிரோதமான குழந்தைத் துஷ்பிரயோகப் பொருட்களைக் கொண்ட வெளிப்புறத் தளங்களுக்கு அழைத்துச் செல்லும் முயற்சிகள் நடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தடுக்கும் வகையில் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளை உடனடியாக வலுப்படுத்துமாறு மெட்டாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு அனுப்பியுள்ள இந்த நோட்டீஸில், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறினால் அல்லது திருப்திகரமான விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால், மெட்டா நிறுவனத்தின் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள் சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், மெட்டாவின் இந்த விவகாரத்தின் மீதான பதிலை அடுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version