அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுவிட்டு தங்கள் பதவியை ராஜினாமா செய்தவர்களில் மூன்று பேர் இன்று சபாநாயகரை சந்திக்க உள்ளனர்.
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ச.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைத்துள்ளது. தவெக ஆட்சி அமைக்க தனது ஆதரவை வழங்கியதன் மூலம் அதிமுகவில் ஒரு பிரிவினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்பட்டனர். அவர்கள் மீது கட்சித்தாவல் நடவடிக்கை எடுக்க அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் கடிதம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நின்ற அதிமுக எம்.எல்.ஏக்களில் மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு சூட்டோடு சூடாக தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்தச் சூழலில், முன்னாள் எம்.எல்.ஏக்களான இம்மூவரும், இன்று காலை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்திக்கின்றனர்.
சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு பதவி ராஜினாமா செய்தது தொடர்பாக தங்கள் தரப்பு குறித்து விளக்கம் அளிக்க இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
ஏற்கனவே கடிதம் மூலம் கொடுத்த விளக்கம் போதுமானதாக இல்லை என்ற அடிப்படையில் நேரில் விளக்கம் அளிக்க சபாநாயகரை சந்திக்கின்றனர்
காலை 11 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் சந்திப்பு நடைபெற உள்ளது.
