ஆந்திரப் பிரதேசத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கடப்பா மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடும் காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளுடன் பலர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வந்தனர். அவர்களின் சளி மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.

அந்த ஆய்வில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓமிக்ரான் ஆர்.எப்.5 (Omicron RF.5) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுவரை 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கென தனி வார்டுகளை தயார் செய்யவும், முகக்கவசங்கள், கிருமிநாசினிகள் மற்றும் தேவையான மருந்துகள் போதுமான அளவில் இருப்பு வைக்கவும் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சோகமான செய்தியும் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், விசாகப்பட்டினம் மற்றும் ராஜமுந்திரி பகுதிகளில் மேலும் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது. மக்கள் அதிக கூட்டம் நிறைந்த இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்வது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

முதியோர், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.ஆந்திர அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பரிசோதனைகளை அதிகரித்தல், தொடர்பு தடமறிதல் உள்ளிட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அச்சப்படாமல், அரசின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றினால் தொற்றை விரைவில் கட்டுப்படுத்த முடியும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version